இது கதையல்ல நிஜம்
நடிகர்: சந்தோஷ் சரவணன் நடிகை: அனிகா விக்ரமன் டைரக்ஷன்: கண்ணன் ராஜமாணிக்கம் இசை: தாஜ்நூர் ஒளிப்பதிவு : ராஜதுரை போலீஸ்காரராக இருக்கும் ஆர்.வி.உதயகுமாரின் மகன் ஜெகன், மகள் அனிகா விக்ரமன். இவர்களோடு ஆதவற்ற சந்தோஷ் சரவணனையும் எடுத்து வளர்க்கிறார். மூவரும் குழந்தைகளாக இருக்கும்போதே ஆர்.வி.உதயகுமார் இறந்து விடுகிறார். வளர்ந்த பிறகு ஜெகன் போலீசாகிறார். அதே போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் சரவணன் எடுபிடி வேலைகள் செய்கிறார். அனிகாவை சந்தோஷ் சரவணன் தங்கையாகவே பார்க்கிறார். ஆனால் சந்தோஷ் சரவணன் மீது அனிகாவுக்கு காதல், இன்னொரு புறம் அதே ஊரை சேர்ந்த சோனு லட்சுமிக்கும் சந்தோஷ் சரவணனுக்கும் காதல் மலர்கிறது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஜெகன் முயற்சிக்கிறார். இதனால் அனிகா விக்ரமன் எடுக்கும் விபரீதமான முடிவும் அதன்பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்ன என்பதும் கதை. நாயகன் சந்தோஷ் சரவணன் துறுதுறுவென துடிப்பான இளைஞராக வருகிறார். கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்து தேர்ந்த நடிகராக பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் மனதை கனக்க வைக்கிறார். ஜெகன் குணசித்திர நடிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அண்ணனாக நினைக்க வேண்டியன் மீது தங்கை காதல் வயப்பட்டதை அறிந்து தவிக்கும்போது காமெடி நடிகர் என்பதை மறக்கடிக்கிறார். கிளைமாக்சில் தங்கைக்காக எடுக்கும் முடிவு அதிர வைக்கிறது. நாயகியாக வரும் சோனு லட்சுமி கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நிறைவாக இருக்கிறார். அனிகா விக்ரமன் நடிப்பும் சிறப்பு, வில்லனாக வரும் ஜெரால்டு, ஆர்.வி.உதயகுமார், கோவை சரளா, சென்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிகிறது. ராஜதுரையின் கேமரா கிராமத்து அழகை கண்முன் நிறுத்துகிறது. தாஜ்நூர் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையும் கதையோடு ஒன்ற வைக்கிறது. முக்கோண காதல் கதை பின்னணியில் குடும்ப உறவுகளின் உணர்வுகளை சுவாரஸ்யமாகவும் உயிரோட்டமாகவும் நேர்த்தியாக படமாக்கி உள்ளார் டைரக்டர் கண்ணன் ராஜமாணிக்கம்.
Post a Comment