Header Ads

நடப்பு நீர்பாசன ஆண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் நடப்பு நீர் பாசன ஆண்டில் மேட்டூர் அணை ஜூலை 16ஆம் தேதி தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. செப்டம்பர் 23ஆம் தேதி வரையிலும் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருந்தது.


பின்னர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததாலும், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதலாக நீர் திறக்கப்பட்டதாலும்,   அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. 



மீண்டும் பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அக்டோபர் 12-ம் தேதியன்று மேட்டூர் அணை நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது. தொடர்ந்து நவம்பர் 24-ம் தேதி வரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வந்தது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மலை தணிந்த காரணத்தாலும் காவேரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கியது. காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு  வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக நீடித்து வந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதன்கிழமை இரவு சுமார் 7.05 மணி அளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.  இதனால் காவேரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆக இருந்தது. மேட்டூர் அணை நிரம்பியதால் அணையின் வலது கரை இடது கரை பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உபரி நீர் போக்கி மதகுகளை உயர்த்துவதற்கு நீர்வளத்துறை பணியாளர்கள் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். காவிரி கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments