Header Ads

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்


நாட்டின்15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக பாராளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

முன்னதாக இன்று காலை அவர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். ஜனாதிபதி பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்முவை வரவேற்றார். அங்கிருந்து ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு ஆகியோர் புறப்பட்டு தனித்தனி கார்களில் குதிரைப்படையினர் புடை சூழ நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர்.

ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தும், ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட இருந்த திரவுபதி முர்முவும் அணிவகுப்பு மரியாதையுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.

அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் விழா தொடங்கியது. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், முதல்வர்கள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு நலன் கருதி நாடாளுமன்ற வளாகத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

21 குண்டுகள் முழங்க…

அதன் பிறகு 21 குண்டுகள் முழங்க புதிய ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆகிய பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 64 சதவீத வாக்குகளுடன் திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments